யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கில் அமைந்துள்ள சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது இடம்பெற்ற வினோத உடைப் போட்டியில், செம்மணி புதைகுழி விவகாரத்தை நினைவூட்டும் வகையில் வேடமணிந்து வந்த சிறுவன், பார்வையாளர்களையும் விருந்தினர்களையும் கண்கலங்கச் செய்துள்ளார்.
“காரணமே இல்லாமல், அம்மாவின் மார்பில் பால் அருந்திய நிலையில் என்னைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் புதைத்துவிட்டார்கள். எனக்கு நீதி கிடைக்குமா?” என்ற வாசகம் எழுதப்பட்ட உடையை அணிந்திருந்த சிறுவன், தனது வேடத்தின் மூலம் நீதிக்கான கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்தச் சிறுவனிடம், “நீங்கள் யாராக வந்துள்ளீர்கள்?” என விருந்தினர்கள் கேட்டபோது, “காரணமே இல்லாமல் செம்மணியில் என்னைப் புதைத்தார்கள்” எனப் பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து, “எங்கிருந்து, ஏன் இப்போது வந்துள்ளீர்கள்?” எனக் கேட்கப்பட்டபோது, “எனது இறப்புக்கும், என்னைப் போன்று புதைக்கப்பட்டவர்களுக்கும் நீதி கேட்டு செம்மணி புதைகுழியிலிருந்து வந்துள்ளேன். எமக்கான நீதியை இந்த அரசாங்கம் வழங்கும் என என்னுடன் புதைக்கப்பட்ட நண்பர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள்” என மழலை மொழியில் கூறியுள்ளார்.
சிறுவனின் இந்த உருக்கமான பதில்கள் அங்கிருந்த பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், பலரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

