மட்டக்களப்பு மீராவோடையில் இயங்கி வரும் கிட்ஸ் கார்டன் (Kids Garden Montessori) முன்பள்ளியின் 8ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டியும் சிறுவர் தின நிகழ்வும் நேற்று முன்தினம் (04) ஹொரைஸன் உள்ளக விளையாட்டு வளாகத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ஏ.எல்.எம். இர்பான் (HFA) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் ஆராய்ச்சி அதிகாரி எம்.என்.எம். யஸீர் அறபாத் (BA) கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதன்போது உரையாற்றிய அவர், இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் கைத்தொலைபேசி பயன்பாடு தொடர்பில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சிறுவர்கள் குறும்பு செய்யும் போதோ அல்லது அடம்பிடிக்கும் போதோ அவர்களை அமைதிப்படுத்தும் தற்காலிக வழியாக பெற்றோர் கைத்தொலைபேசிகளை வழங்குகின்றனர். எனினும், காலப்போக்கில் இது சிறுவர்களிடையே தொலைபேசி பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, சிறுவர்களை கைத்தொலைபேசி பயன்பாட்டிலிருந்து விலக்கி, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் எனவும், இதன்மூலம் அவர்களை ஆரோக்கியமான தலைமுறையாக வளர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், சிறுவர்களின் உடல், உள மற்றும் சமூக வளர்ச்சிக்கு அடித்தளமிடும் வகையில் முன்பள்ளிகளால் ஏற்பாடு செய்யப்படும் விளையாட்டு நிகழ்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும், ஏனைய முன்பள்ளிகளும் இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் விண் ஒளி கலைமன்றத் தலைவர் ஏ.எல்.எம். இர்சாத் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

