அவுஸ்திரேலிய மாணவர் விசா விதிகளில் அதிரடி மாற்றம்!

அவுஸ்திரேலியா தனது மாணவர் விசா விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, பல விண்ணப்பதாரர்கள் நாட்டுக்குள் தங்கியிருக்கும் நிலையில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், குடும்ப உறுப்பினர்களை விசா விண்ணப்பத்தில் இணைப்பதற்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சின் தகவலின்படி, மாணவர் விசா (Subclass 500) மற்றும் மாணவர் பாதுகாவலர் விசா (Subclass 590) தொடர்பான புதிய விதிகள் 2026 ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

இதன்படி, அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள பெரும்பாலான தற்காலிக விசா வைத்திருப்பவர்கள், நாட்டுக்குள் இருந்துகொண்டு மாணவர் அல்லது மாணவர் பாதுகாவலர் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது. இவர்கள் விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போதும், விசா வழங்கப்படும் போதும் அவுஸ்திரேலியாவுக்கு வெளியே இருக்க வேண்டும்.

அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே மாணவர் விசாவில் இருக்கும் நிலையில் மற்றொரு மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும்.

எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய தகுதிகள் கட்டமைப்பில் (AQF) உயர் மட்டப் படிப்புக்கு முன்னேறும் மாணவர்கள், கலாநிதிப் பட்ட படிப்புக்கு (PhD) விண்ணப்பிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், குறிப்பிட்ட அரச அனுசரணை பெறும் மாணவர்கள் மற்றும் ஏற்கனவே பயிலும் கற்கைநெறியை நிறைவு செய்ய மேலதிக கால அவகாசம் தேவைப்படும் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, மாணவர் விசா விண்ணப்பங்களுடன் குடும்ப உறுப்பினர்களை இணைப்பதிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மாணவர் விசா விண்ணப்பதாரர்கள் தமது துணைவர் அல்லது சார்ந்திருக்கும் பிள்ளைகளை புதிய விண்ணப்பத்தில் இணைக்க முடியாது.

எனினும், கலாநிதிப் பட்ட படிப்பு (PhD) மாணவர்கள், அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் திணைக்களம் (DFAT) அல்லது பாதுகாப்புத் துறையின் அனுசரணை பெறும் மாணவர்கள், வெளிநாட்டு அரசாங்கங்களின் புலமைப்பரிசில் பெறுவோர் மற்றும் தகுதியான பசுபிக் நாடுகள் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே மாணவர் விசா பெற்றுள்ளவர்கள், விசா வழங்கப்பட்ட பின்னர் தமது குடும்ப உறுப்பினர்களை “subsequent entrants” என்ற முறையில் இணைப்பதற்கும் இனி அனுமதி இல்லை என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விதிக்கு எந்தவிதமான விலக்கும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட மாணவர் விசா விண்ணப்பங்கள் மற்றும் அவற்றில் இணைக்கப்பட்டிருந்த குடும்ப உறுப்பினர்களின் விண்ணப்பங்கள் பாதிக்கப்படாது. அவை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில் நடைமுறையில் இருந்த விதிகளுக்கு அமைய தொடர்ந்து பரிசீலிக்கப்படும்.

புதிய விதிகளுக்கு அமைய அவுஸ்திரேலியாவுக்கு வெளியிலிருந்து விண்ணப்பிக்க வேண்டிய ஒருவர் நாட்டுக்குள் இருந்துகொண்டு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால், அந்த விண்ணப்பம் செல்லுபடியற்றதாகக் கருதப்படும் என உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.

எனவே, கல்விக் கற்கைநெறிகளில் பதிவு செய்வதற்கு முன்னரும், பயணம், நிதி அல்லது குடியேற்றம் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்னரும் புதிய விசா விதிமுறைகளை முழுமையாக சரிபார்க்குமாறு எதிர்கால மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *