80-களின் முன்னணி நடிகைகளான சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா இடையே சென்னையில் உள்ள ‘ஏ.ஆர்.எஸ் கார்டன்’ சொத்து மற்றும் ரூ. 46 கோடி காசோலைவிவகாரம் தொடர்பாகக் கடுமையான மோதல் வெடித்துள்ளது.
தமது அறையிலிருந்த காசோலைகளைத் திருடி ரூ. 46 கோடி மோசடி செய்ய முயன்றதாகச் சகோதரி அம்பிகா மற்றும் சகோதரன் மல்லிகார்ஜுனன் மீது நடிகை ராதா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இப்புகாருக்குப் பதிலளிக்கும் வகையில் நடிகை அம்பிகா செய்தியாளர்களைச் சந்தித்துக் கண்ணீர்மல்கத் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
அம்பிகா அளித்த முக்கிய விளக்கங்கள்:
-
பொய்யான குற்றச்சாட்டு: “என் மீது திருட்டுப் பழியைப் போட்டதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏ.ஆர்.எஸ் கார்டன் உருவாக முக்கியக் காரணமாக இருந்தது எனது உழைப்புதான். ஆனால், அச்சொத்திலிருந்து எனது பெயரை எனக்குத் தெரியாமலேயே நீக்கிவிட்டார்கள்.”
-
காசோலை விவகாரம்: “சொத்துப் பிரச்சினையைத் தீர்க்கவும், எனக்குச் சேர வேண்டிய பங்கு மற்றும் தங்க நகைகளுக்காகவும் ராதாவே முன்வந்து காசோலைகளை வழங்கினார். பின்னர் அவரே அதை ஸ்டாப் (Stop payment) செய்துவிட்டு, என் மீது திருட்டுப் புகார் அளித்துள்ளார்.”
-
உண்மையான நிலுவைத் தொகை: “உண்மையில் ராதா தான் எங்களுக்கு ரூ. 97 கோடி வரை தர வேண்டும். ஆனால் அவரே என் மீது புகார் கொடுத்திருப்பது வேதனையளிக்கிறது. நான் உண்மையை வெளிப்படையாகப் பேசினால் ராதா தான் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை வரும்.”
-
சமரசம் செய்யத் தயார்: “குடும்பப் பிரச்சினை வெளியே வரக் கூடாது என்றுதான் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தேன். அம்மா எங்களை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார்; எனவே, இந்த விவகாரத்தில் பேசிக் சுமுகமாகச் சமரசம் செய்ய இப்போதும் தயார்” என்று கண்கலங்கியபடி தெரிவித்துள்ளார்.

