நெடுந்தீவில் இயங்கும் கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாததால், புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் வேதநாயகன் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற சந்திப்பில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இதற்கான நிதியை தற்போதைய திட்டங்களில் மீதமுள்ள சேமிப்பு நிதியில் இருந்து பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறும் அவர் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மழைநீரை சேமித்து பயன்படுத்தும் மாற்றுத் திட்டங்கள் தொடர்பிலும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர கழிவுநீர் முகாமைத்துவ வலையமைப்புத் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்துக்கான கேள்விகோரல் நடவடிக்கைகள் இந்த ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்படும் என பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

