ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதியின் 38-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, நினைவுரைகளும் மாணவர்களது கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
”ஆயுதங்கள் மௌனித்தாலும், ஒரு தாயின் ஆத்மார்த்தமான தியாகம் காலத்தால் அழியாதது. நீதியின் குரலாக ஒலித்த அன்னை பூபதியின் அர்ப்பணிப்பு, தமிழர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும்.”
கிளிநொச்சி மாவட்ட பிரதான பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வில், கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர் சங்கத்தின் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் குணபாலசிங்கம் குணராஜ், மதகுருமார்கள், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், உணர்வாளர்கள், வர்த்தகப் பெருமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

