மட்டக்களப்பில் மது அருந்த பணம் தர மறுத்த தாயை கொன்ற மகன்!

மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தரவில்லை என்ற கோபத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொலை செய்த சந்தேகநபரான 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக, சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை, சித்தாண்டி 4ஆம் பிரிவு, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த குமாரசாமி வசந்தா (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 6.00 மணியளவில், சந்தேகநபரான மகன் தனது தாயிடம் மது அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் கேட்டுள்ளார். தாயார் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த மகன், தாயைப் பிடித்து ஆவேசமாகத் தள்ளியுள்ளார்.

இதன்போது நிலைதடுமாறி கீழே விழுந்த தாயின் தலை தரையில் பலமாக மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து தப்பியோடிய சந்தேகநபரான இளைஞனை பொலிஸார் தேடிப் பிடித்துக் கைது செய்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *