இந்தியாவில் லொறி– பஸ் விபத்து: 13 பேர் பலி, 25 பேர் காயம்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்திற்குட்பட்ட மார்காபுரம் பகுதியில் வியாழக்கிழமை ( 26) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து மார்காபுரம் அருகிலுள்ள ராயவரம் பகுதியில் அதிகாலை 5.30 மணிளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தகவல்களின் படி, திருப்புமுனைப் பகுதியில் சென்ற தனியார் பயணிகள் பஸ், கனிகிரி பகுதியில் இருந்து கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பஸ் தெலங்கானா மாநிலத்தின் நிர்மல் பகுதியில் இருந்து நெல்லூர் மாவட்டத்திற்குட்பட்ட வின்ஜமூரு நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்திற்குள்ளான பஸ் வண்டியில் 41 பேர் பயணம் செய்துள்ளதாகவும் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் 25 பேர் காயமடைந்து மார்காபுரம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான காயமடைந்த 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக குண்டூர் அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா இந்திய ரூபா மதிப்பில் ரூ. 2 இலட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த விபத்துக்கான காரணங்களை கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *