விமானப்பயணச் சீட்டு மோசடி தொடர்பில் பொலிஸார் அவசர எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் விமானப்பயணச் சீட்டு மோசடிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலைகள் அல்லது விசேட தள்ளுபடி விலைகளில் விமானப்பயணச் சீட்டுக்களை வழங்குவதாகக் கூறி, பொதுமக்களை ஏமாற்றிப் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் நோக்கில் இவ்வாறான போலி விளம்பரங்கள் பரப்பப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான மோசடிகளில் சிக்கிப் பாதிக்கப்படாமல் இருக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்:

அதன்படி, உறுதிப்படுத்தப்படாத அல்லது சந்தேகத்திற்குரிய இணையத்தள இணைப்புகளை அழுத்துவதைத் தவிர்க்கவும். இவ்வாறான தளங்கள் உங்களது இரகசியத் தகவல்களைத் திருடப் பயன்படுத்தப்படலாம்.

அத்துடன், கடவுச்சொற்கள் அல்லது ஒருமுறை பயன்படுத்தும் இரகசியக் குறியீடுகளை எக்காரணம் கொண்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்தியோகபூர்வ விமான நிறுவனங்கள் தொலைபேசி அழைப்புகள் ஊடாக இவ்வாறான தகவல்களைக் கோருவதில்லை.

ஏதேனும் சலுகைகள் அறிவிக்கப்பட்டால், அவற்றை அந்தந்த விமான நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் ஊடாகச் சரிபார்க்கவும்.

மேலும், பயணச் சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர், அவை பதிவுசெய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இவ்வாறான மோசடிகள் குறித்து விழிப்புடன் செயற்படுமாறும், நிதி இழப்புகளைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறும் இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *