கடந்த மூன்று மாத காலமாக தடைபட்டிருந்த மட்டக்களப்பு கொழுப்புக்கான இரவு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. நேற்று இரவு 7 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட புகையிரதம் இன்று(24) காலை ஆறு மணி அளவில் மட்டக்களப்பை வந்தடைந்தது.
கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் காட்டு யானைகள் விபத்துக்கு உள்ளாகும் காரணத்தினால் நள்ளிரவு 11 மணிக்கு மாற்றப்பட்டு இடம்பெற்று வந்தது. இருப்பினும் இயற்கை அனர்த்தத்தினால் அவை தடைப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் போக்குவரத்து அமைச்சரினால் மீண்டும் இரவு சேவை பழைய வழமையான நேரத்திற்கு மாற்றப்பட்டு தற்போது சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்பும் வகையில் புதிய அரசாங்கத்தினால் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த புகையிரத பாதைகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு தற்போது அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.
இதில் முன்பிருந்ததைப் போல குளிரூட்டப்பட்ட உறங்கல் இருக்கை பெட்டிகளுடன் நிகழ்நிலை ஊடாக முட்பதிவுகளும் மேற்கொள்ள முடியும் என புகையிரது திணைக்களம் தெரிவித்துள்ளது.

