கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிப்பு!

2009/2010 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதிலிருந்து இதுவரை இழைக்கப்பட்ட அநீதிகள், புறக்கணிப்புகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவைப் பிரமாணத்தினூடாக ஏற்பட்டுள்ள அநீதிகள் தொடர்பில் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைவாக, எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சின் முன்பாக இவர்கள் மௌனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். இதற்கு கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களும், நிர்வாக கிராம உத்தியோகத்தர் சங்கங்களும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் குறித்த அமைச்சின் செயலாளருடன் இது தொடர்பில் பல சுற்றுப் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட போதிலும், திட்டவட்டமான மற்றும் சாதகமான பதில் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

2026 மார்ச் 02 ஆம் திகதியாகும் போது கிராம உத்தியோகத்தர் சேவையில் 17 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள, தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்களில் சுமார் 25 சதவீதமானவர்கள், அதாவது 2,300 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் இதன் மூலம் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்தத் திட்டவட்டமான மற்றும் நியாயமான கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படாவிட்டால், எதிர்வரும் காலங்களில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் 2009/2010 கிராம உத்தியோகத்தர்கள் குழு தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *