பிலியந்தலை, பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் (Boarding Room) இருந்து 10 மில்லி கிராம் கொக்கைன் மற்றும் கஞ்சா கலந்த, 255 கிராம் ‘சிப்ஸ்’ (Chips)வகை போதைப்பொருட்களுடன் பிரபல சின்னத்திரை நாடக நடிகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் மற்றும் பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 28 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்தேகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக்க குமாரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, பிலியந்தலை நகரின் மத்தியில் உள்ள குறித்த தங்குமிடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேக நபர்களுக்கு போதைப்பொருள் வழங்கிய நபர் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பிலியந்தலையிலுள்ள அவரது வீட்டைச் சோதனையிட்ட போது அங்கு 255 கிராம் கஞ்சா கலந்த ‘சிப்ஸ்’ கண்டெடுக்கப்பட்டது.
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இறுதியாக கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து போதைப் பொருட்களை பெற்றுக்கொண்டு, அதை கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு கூரியர் (Courier) சேவை ஊடாக கடத்தப்படுவது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

