காட்டு யானை அட்டகாசம் தொடர்பான கலந்துரையால்!

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் பிரதேச மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகள் அச்சுறுத்தும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

இந்த நிலைமைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளைக் காணும் நோக்கிலும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையிலும் கடந்த (13) பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் பிரதேச செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஓட்டமாவடி ஆறு மற்றும் அண்டிய சிறிய காட்டுப்பகுதியூடாக குடியிருப்புக்களுக்குள் நுழையும் காட்டு யானைக்கூட்டம், பிரதேச மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதுடன், சொத்துகள் மற்றும் நாளாந்த வாழ்விலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

இதன் போது, கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் பொது நிறுவனங்களின் உதவியுடன் காட்டு யானைக்கூட்டம் மறைவதற்கு ஏதுவாகவுள்ள பற்றைக் காடுகளை சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சிரமதானம் மூலம் துப்பரவு செய்வதுடன், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவி, ஆலோசனையின் படி குடியிருப்புக்களுக்குள் புகுந்து அட்டகாசம் புரியும் யானைக் கூட்டத்தை துரத்தியடிப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், யானைகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனை எதிர்கொள்வது தொடர்பிலும் இளைஞர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு பிரதேச செயலாளரால் தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டன.

இக்கலந்துரையாடலின் போது தியாவட்டவான் கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எம். அன்வர் சதாத், தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.எம். அறபாத், பள்ளிவாயல் நிருவாகிகள், சமூகமட்ட அமைப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *