கடற்படையின் விசேட படகு மூலம் நெடுதீவு சென்றடைந்த பேருந்து!

நெடுந்தீவில் சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கடற்படையின் விசேட படகு மூலம் நெடுதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் இதுவரை காலமும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரே ஒரு பேருந்து மாத்திரமே தீவு முழுவதற்குமான சேவையில் ஈடுபட்டிருந்தது.

நீண்ட நாட்களாக சேவையில் ஈடுபட்ட குறித்த பேருந்து , துரு ஏறி அடிக்கடி பழுதடையும் நிலையில் , கடும் சிரமத்திற்கு மத்தியில் பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

அதிகளவான சுற்றுலா பயணிகள் நெடுந்தீவுக்கு செல்லும் நிலையிலும் , அங்குள்ள மக்களின் போக்குவரத்திற்கும் பெரும் இடர் நிலவி வந்த நிலையில் , கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து ஒருங்கிணைப்புக் விசேட குழுக்கூட்டத்தில் நெடுந்தீவு பேருந்து விடயம் குறித்து பேசப்பட்டது.

அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அப்போது அமைச்சர் கூறியிருந்த நிலையில் சுமார் 05 மாதங்களின் பின்னர் நெடுந்தீவுக்கு பேருந்து கொண்டு செல்லப்பட்டு , சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை , இதுவரை காலமும் நெடுந்தீவில் சேவையில் ஈடுபட்ட பேருந்து திருத்த வேலைகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *