காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான காதலை மையப்படுத்திய திரைப்படங்களில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘கப்புள் ஃபிரண்ட்லி’ எனும் படமும் இடம் பிடித்திருக்கிறது. இது இளந்தலைமுறை ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
உள்ளரங்க அழகியல் தொடர்பான பிரத்யேக கல்வியை கற்று அதற்கான பணி வாய்ப்பிற்காக காத்திருக்கும் சிவா… தந்தையின் சுடுசொல்லால் கோபித்துக் கொண்டு சென்னைக்கு வேலை தேடி செல்கிறார். அங்கு திருநெல்வேலியிலிருந்து தனக்கென தனி சுய அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தகவல் தொழில்நுட்ப துறையில் மட்டும் பணியாற்றும் விருப்பத்துடன் தொடர்ந்து நேர்காணலில் பங்கு பற்றி வரும் மித்ரா எனும் இளம் பெண்ணை சந்திக்கிறார்.
நெருக்கடியான தருணங்களில் சந்தித்துக் கொள்ளும் இருவருக்கும் இடையே ஒரு புரிதல் ஏற்படுகிறது. இருவரும் தங்களது புரிதலை படுக்கையிலும் நீட்டித்து கொள்கிறார்கள். அதன் பிறகு சிவாவும், மித்ராவும் திருமணம் செய்து கொள்ள தீர்மானிக்கிறார்கள். இதற்கு மித்ராவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவிக்க.. காதலர்கள் திருமணத்தில் இணைந்தார்களா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.
வழக்கமான காதல் கதையாக இருந்தாலும்.. நம்பகமான.. யதார்த்தமான… சூழல் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான விடயங்களை சுவராசியமாக விவரித்திருக்கிறார் இயக்குநர்.
முதல் பாதியில் மித்ரா கதாபாத்திரத்தின் கட்டற்ற காமம் கலந்த காதல் உணர்வு வெளிப்பாடு… பார்வையாளர்களுக்கு புதிராக இருந்தாலும்.. இரண்டாம் பாதியில் அந்த கதாபாத்திரத்தை பார்வையாளர்களின் மனதில் பதிய செய்த இயக்குநரின் உத்தியை பாராட்டலாம்.
முதல் பாதியில் மென்மையான தருணங்களையும்.. இரண்டாம் பாதியில் இதயத்தை கனக்கச்செய்யும் தருணங்களையும்.. இடம்பெற செய்து இருப்பது சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் சந்தோஷ் சோபன் நேர்த்தியாக நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்த்திருக்கிறார். தமிழுக்கு ஒரு அற்புதமான வரவு.
சிவாவுக்கு உதவியாளராக சங்கர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு குறைவான நேரத்தில் திரையில் தோன்றினாலும் சிரிக்க வைத்து விடுகிறார்.
இவர்களை கடந்து சிவாவின் அண்ணி கதாபாத்திரம் மற்றும் மித்ராவின் அம்மா கதாபாத்திரம் பேசும் உரையாடல்கள் கவனம் பெறுகிறது.
இயக்குநருக்கு ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி.. ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்கள்.

