அரசாங்கத்திற்கு இந்தியா இல்லாமல் எதுவுமே இல்லை: சாமர சம்பத்

கடந்த கால அரசாங்கங்களை காட்டிலும் இந்தியாவை தீவிரமாக ”லவ்”பண்ணும் (காதலிக்கும்) அரசாங்கமாக அநுரகுமார அரசாங்கமே உள்ளது. இந்தியாவின் விருப்பு, வெறுப்புக்கு அமையவே அரசாங்கம் செயற்படுகிறது. இவர்களுக்கு வெட்கமில்லையா என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்தியாவுக்கு எதிராக இந்திய எதிர்ப்பு மாதத்தை அனுஸ்டித்தவர்களுக்கு இன்று இந்தியா இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டை ஆட்சி செய்த ஜே .ஆர். ஜெயவர்த்தன,பிரேமதாச சந்திரிகா, மஹிந்த, கோட்டா, மைத்திரி, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை விட அநுரகுமார அரசாங்கமே இந்தியாவை தற்போது தீவிரமாக காதலிக்கிறது.

ஜே .வி.பி. யின் செயலாளர் ரில்வின் சில்வா தற்போது இந்தியாவில் குதூகலம் அனுபவிக்கின்றார். ஜனாதிபதியும் இந்தியா செல்லவுள்ளார். இன்று இவர்களுக்கு எல்லாமே இந்தியாதான். உங்களுக்கு வெட்கமில்லையா? உங்களால் கொல்லப்பட்டவர்கள், உங்களுக்காக உயிர்கொடுத்தவர்கள் உங்களின் இந்திய ”லவ்”வை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் பதில் சொல்ல வேண்டிவரும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *