இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாகக் கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் இடம்பெற்றது.
தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை எனத் தெரிவித்து, இந்த நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது. அந்த அழைப்புக்கு சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் ஆதரவை தெரிவித்திருந்தன.
இவ்வாறான சூழ்நிலையில் கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
அங்கு ஆரம்பமான போராட்டம் பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்ந்தது.
இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் – யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த போராட்டத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் வீதிகளில் குவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போராட்டத்தின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
செயலாளர் நாயகம்,
ஐக்கிய நாடுகள் சபை
04-02-2026.
விடுதலைக்காக போராடுவது எங்கள் உரிமை!
இன்று 2026 பெப்ரவரி 4ம் திகதி தமிழ் மாணவர்களும், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும், தமிழ் சமூக அமைப்புகளும், தமிழ் மக்களுமாக ஒன்றிணைந்து ஸ்ரீலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள் என பிரகடனப்படுத்தி பேரெழுச்சியாக இன்று தாயகத்தின் கிளிநொச்சி மற்றும் மட்டக்கிளப்பிலும் ஒன்றாக திரண்டிருக்கின்றோம். ஈழத் தமிழர்களாகிய நாம் தாயக தேசியம், தன்னாட்சி உரிமைக்காக உரித்துடைய ஒரே தேசிய இனம் என்பதை உலகுக்கு மீண்டும் பிரகடனப்படுத்துகின்றோம். வட்டுக்கோட்டை தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் பிரகடனம் என்பவற்றின் ஊடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகளை கூட்டாக பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்காக மீண்டும் ஒரேதடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக்கூற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இன்று பேரெழுச்சியாக நாம் திரண்டுள்ளோம்.
இலங்கை தீவின் வரலாற்றில் தமிழர்களும், சிங்களவர்களும் தம்மைத் தாமே ஆழும் சுயாதீன இராட்சியங்களை கொண்டிருந்தனர். காலனித்துவ ஆட்சியாளர்களான போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர்கள் தங்களுடைய சுமார் 300 வருட ஆரம்ப ஆட்சிக் காலத்தில் சிங்கள இராட்சியங்களையும், தமிழ் இராட்சியங்களையும் தனித்தனியாக நிர்வகித்து வந்தனர். 1833 ஆம் ஆண்ட சோல்புரூக் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் தம்முடைய நிர்வாக நடைமுறையை இலகு படுத்துவதற்காக சிங்கள இராட்சியங்களும் தமிழ் இராட்சியங்களும் பிரித்தானியர்களால் இணைக்கப்பட்டது, என்ற வரலாற்று உண்மையை முதலில் சிங்கள் தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

