மட்டக்களப்பு அரசடித்தீவில் ஆரோக்கியா நிலையமானது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர் முரளீஸ்வரன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் பொறுப்பதிகாரி திருமதி டுலக்சி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் கே.மோகனக்குமார் அவர்கள் இன்று (24) ஆரம்பித்து வைத்தார்.
நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கும் இத் தேசிய திட்டத்தின் கீழ் ஆரோக்கியா நிலையத்தின் முதன்மை நோக்கம் இப்பிரதேசத்தில் வாழும் சிறு பிள்ளைகள் முதல் முதியவர் வரைக்கும் அவர்கள் இல்லங்களிற்கு அருகாமையில் தொடர்ச்சியான அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குவதாகும்.
இப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கான தொற்றா நோய் தொடர்பான பரிசோதனைகள், மாற்று திறனாளிகளுக்கான பராமரிப்பு, கண் பராமரிப்பு, புற்றுநோய் பரிசோதனை, முதியோர் பராமரிப்பு, இளைஞர் நலன் மற்றும் பல அடிப்படை சுகாதார சேவைகள் வழங்கப்படவுள்ளன.
இவ் மையத்தின் கீழ் அரசடி தீவு, அரசடி தீவு வடக்கு, மற்றும் பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 3000 மேற்பட்ட மக்களுக்கான சேவைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது கருத்து தெரிவித்த பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆரோக்கியா நிலையத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள சேவைகள் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கினார்.
இந் நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச தவிசாளர் திரேஸ்குமார், தொற்றா நோய் தடுப்பு பொறுப்பதிகாரி எம்.ருதேசன், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி, தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர், கிராம சேவகர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரோக்கியா நிலையம் பரீட்சாத்த சேவைகள்
வழக்குவதற்கு அரசடித்தீவு மற்றும் வெல்லாவளி ஆகிய பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

