ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எஸ். நழீம், பிரதி தவிசாளராக ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த ஞானசேகரன் கஜேந்திரன் ஆகியோர் இன்று(16) தெரிவு செய்யப்பட்டனர்.
17 உறுப்பினர்களை கொண்ட ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளர் உப தவிசாளர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நகர சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் போட்டியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் எம்.எஸ். சமீம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான முஹம்மட் சாலி நழீம் போட்டியிட்டதையடுத்து திறந்த வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் பிரசன்னமான நிலையில் 16 பேருடன் இந்த தவிசாளர் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட எம்.எஸ்.நழீம் ஆதரவாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 07 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த 01 உறுப்பினரும், தமிழரசுக் கட்சியை சேர்ந்த 01 உறுப்பினர் என மொத்தமாக 09 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எம்.எஸ்.சமீம் ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 04 உறுப்பினர்களும், தமிம் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த 02 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 01 உறுப்பினரும் 07 உறுப்பினர் வாக்களித்தனர்.
இதன் பிரகாரம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எஸ். நழீம்; 02 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏறாவூர் நகர சபையின் பிரதி தவிசாளராக போட்டியிட்ட ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த ஞானசேகரன் கஜேந்திரன் 9 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கே.எம்.எம். அன்வர் போட்டியிட்ட உறுப்பினருக்கு 7 வாக்குகளும் அளிக்கப்பட்டதையடுத்து ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த ஞானசேகரன் கஜேந்திரன் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் ஹிஸ்புல்லா, தமிழரசு கட்சி நா.உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



