சைபர் தாக்குதலில் எந்த தரவுகளும் சேதமடையவில்லை

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் குறுஞ்செய்தி சேவை மீதான சைபர் தாக்குதலில் எந்த தரவுகளும் சேதமடையவில்லை என்று சபை தெரிவித்துள்ளது.

 

அதன் தரவு அமைப்பைப் பாதுகாக்க ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அதன் மேலதிக பொது மேலாளர் பிரதீப் ஹேரத் தெரிவித்தார்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், நபர் ஒருவர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இணையதளத்தில் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சித்துள்ளார்.

 

குறித்த நபர் சபையின் குறுஞ்செய்தி சேவையை அணுகி வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

குறித்த நபர் வாடிக்கையாளர்களின் கைப்பேசிகளுக்கு சுமார் 10,000 குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

தங்கள் தரவை மீட்டெடுக்க ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு குறுஞ்செய்தி ஊடாக வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும், உடனடியாகச் செயல்பட்ட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தொடர்புடைய குறுஞ்செய்தி சேவையை மீட்டெடுத்து, போலி குறுஞ்செய்தி குறித்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அறிவித்ததாகக் கூறப்படுகிறது.

 

இதற்கிடையில், அரச நிறுவன வலைத்தளங்களின் பாதுகாப்பிற்காக 24 மணி நேர செயல்பாட்டு முறையை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறது.

 

வலைத்தளங்களின் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள பலவீனங்களே இந்த சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுத்ததாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *