கிழக்கு மாகாண பண்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் வழங்கப்படுகின்ற நாட்டாரியலுக்கான வித்தகர் விருது – 2026 இனை சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட அண்ணாவியார், கலாபூஷணம் அபூபக்கர் இஸ்ஸதீன் அவர்கள் சுவீகரித்துக் கொண்டார்.
பாரம்பரியக் கலையான “கோலாட்டம்” எனும் பொல்லடிக் கலையை முறையாகப் பயின்று, இளம் தலைமுறைக்கேயும் அதனைப் பயிற்றுவித்து வரும் இவர், சிறுவயது முதல் இக்கலையின் வளர்ச்சிக்குப் பல அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளார்.
பாரம்பரியப் பாடல்களுடன் பொல்லடி அடிகளுக்கேற்ற சினிமாப் பாடல்களையும் இணைத்துப் பாடி சபையோரை பரவசப்படுத்தும் இவரது தனித்துவமான கலைச்சேவை கலை உலகில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது.
ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றியை அவர் பெற்ற கல்வித் தகுதிகளாலும், வகித்த பதவிகளாலும், சேர்த்த செல்வங்களாலும் மட்டுமே அளவிட முடியாது. குடும்பத்திற்காக அவர் செய்த தியாகங்களும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மேற்கொண்ட முயற்சிகளும், தனது திறமைகளை வெளிப்படுத்துவதற்காகக் கொண்டிருந்த அர்ப்பணிப்புமே அவரது உண்மையான வெற்றியை வெளிப்படுத்துகின்றன.
அந்த வகையில், சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்து, குடும்பச் சூழ்நிலைகளால் தனது கல்வியைத் தொடர்ந்து கற்க முடியாத நிலையிலும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு தனது குடும்பத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார், ஐந்து பெண் பிள்ளைகளையும் ஓர் ஆண் மகனையும் கொண்ட குடும்பத்தின் தலைவராக, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி, கல்வி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து, தனக்குக் கிடைக்காத கல்வி வாய்ப்புகளைத் தனது பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் உழைத்ததன் பயனாக, தனது ஆறு பிள்ளைகளில் மூவரைப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளாக உருவாக்கியுள்ளார்.
தனது கல்விக் கனவுகளை நிறைவேற்ற முடியாத நிலையிலும், தனது பிள்ளைகளின் கல்விக் கனவுகளை நனவாக்கிய ஒரு தந்தையின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே போற்றத்தக்கது!
குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் முன்னிறுத்தி வாழ்ந்த அவர், அன்றாடப் பணிகளையும் குடும்பப் பொறுப்புகளையும் நிறைவேற்றிய பின்னர் கிடைக்கும் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, நாட்டார் கலைத்துறையில் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டு, தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கினார்.
குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியிலும் தனது கலைத்திறமையைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்ட அவரது முயற்சிகளுக்குக் கிடைத்த முக்கியமான அங்கீகாரமாக, கிழக்கு மாகாண பண்பாட்டு அமைச்சின் நாட்டாரியலுக்கான வித்தகர் விருது – 2026 அமைகிறது.
சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட அண்ணாவியார் கலாபூஷணம் அபூபக்கர் இஸ்ஸதீன் அவர்கள் இவ்விருதைச் சுவீகரித்திருப்பது அவரது தனிப்பட்ட சாதனை மட்டுமன்றி, அவரது குடும்பத்தினருக்கும் சமூகத்தினருக்கும் பெருமையளிக்கும் நிகழ்வாகும்.
தனது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தின் மூலம் ஒரு சிறந்த குடும்பத் தலைவராகவும், கலைத்துறையில் பெற்ற அங்கீகாரத்தின் மூலம் தனித்துவமான அடையாளம் கொண்ட கலைஞராகவும் அவர் இன்று திகழ்கின்றார்.
பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பதில் முன்னின்று உழைக்கும் இத்தகையதொரு சிரேஷ்ட கலைஞருக்குக் கிடைத்துள்ள இந்த அரச அங்கீகாரத்திற்கு கலை உலகினர் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

