உளநல விழிப்புணர்வை ஏற்படுத்த விநாயகபுரத்தில் சைக்கிள் ஓட்டம்!

உலக உள நல தினத்தை முன்னிட்டு, உள நலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் வழிகாட்டல் ஆலோசனைப் பிரிவின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் பி. ஜெயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்கள் மற்றும் சமூகத்தினர் மத்தியில் உள நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உள நலத்தைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 10ஆம் திகதி உலக உள நல தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், உள நலப் பிரச்சினைகள் தொடர்பான புரிதலை மேம்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்நிகழ்வு எடுத்துரைத்தது.

பாடசாலையிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டம்

விநாயகபுரம் மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டம், பிரதான வீதி வழியாகத் தம்பிலுவில் மத்திய சந்தையைச் சென்றடைந்தது. தொடர்ந்து, பிரதான வீதி ஊடாகத் திருக்கோவில் பொலிஸ் நிலைய வீதியை அடைந்து, அங்கிருந்து விநாயகபுரம் மத்திய வீதி வழியாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

உண்மையான குரல்களுக்குச் செவிசாய்ப்போம்!

“உண்மையான அனுபவங்களுக்குச் செவிமடுப்போம்; உண்மையான குரல்களுடன் மாற்றத்தை ஏற்படுத்துவோம்!” என்ற கருத்தை முன்னிறுத்தி, உள நலப் பாதுகாப்பின் அவசியம் இந்நிகழ்வின் ஊடாக வலியுறுத்தப்பட்டது.

மனநலம் என்பது ஒவ்வொரு மனிதனினதும் அன்றாட வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய முக்கிய அம்சமாகும். குறிப்பாக, மாணவர்களின் கல்வி முன்னேற்றம், ஆளுமை வளர்ச்சி, உணர்வுசார் நல்வாழ்வு மற்றும் சமூக உறவுகளை மேம்படுத்துவதில் உள நலம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

உள நலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குச் செவிசாய்த்து, தேவையான ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்குவது குடும்பத்தினர், பாடசாலைச் சமூகம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரினதும் பொறுப்பாகும்.

உள நலம் தொடர்பான தவறான புரிதல்களையும் புறக்கணிப்பையும் நீக்கி, ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் நடந்துகொள்ளும் சமூகத்தை உருவாக்குவதன் அவசியத்தையும் இவ்விழிப்புணர்வு நிகழ்வு எடுத்துக்காட்டியது.

உள நலத்தைப் பேணுவோம்! ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம்! உள நலமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *