மட்டக்களப்பு, குருக்கள்மடம் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி இருப்பதாகக் கருதப்படும் இடத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று எட்டாவது நாளாகவும் தொடர்ந்தன.
களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி த. பிரதீபனின் மேற்பார்வையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொல்பொருள் விசேட நிபுணர் கலாநிதி ராஜ் சோமதேவ, தடயவியல் மற்றும் மானுடவியல் நிபுணர்களும் சட்ட வைத்திய அதிகாரிகளுமான தரங்க டி சில்வா மற்றும் கிரியுல்ல ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குருக்கள்மடம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் காணியொன்றில் மனிதப் புதைகுழி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வழக்கின் முறைப்பாட்டாளர்கள் சார்பான சட்டத்தரணி மு. அஸ்ஸம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கடந்த 06ஆம் திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பிரதேச சபையின் ஆளணி மற்றும் இயந்திர உதவியுடனும், காத்தான்குடி சமூக அமைப்புகளின் ஒத்துழைப்புடனும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், இதுவரை சந்தேகத்திற்கிடமான குறிப்பிடத்தக்க தடயங்கள் எவையும் கண்டெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

