இலங்கைக்குக் கடத்தவிருந்த சிகரெட் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்துவதற்காக, தமிழகம்-ராமநாதபுரம் புதுமடம் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபா மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் மற்றும் கடத்தி வர பயன்படுத்திய வாகனம் உள்ளிட்டவைகளை, மரைன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை அதிகாலை சுமார் ஒரு மணி அளவில், புதுமடம் மரைன் பொலிஸார் மற்றும் கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, இலங்கைக்கு சிகரட் கடத்தப்படவுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சிலர் வாகனம் ஒன்றில் இருந்து மூட்டைகளை இறக்கி கடற்கரையில் பதுக்கி வைத்துக் கொண்டு இருந்ததை கண்ட பொலிஸார், அவர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் தப்பியோடிய நிலையில் ஒருவர் மட்டும் பொலிஸாரிடம் சிக்கினார்.

அதனைத்தொடர்ந்து, அங்கிருந்த மூட்டைகளை சோதனை செய்தபோது, 35 மூட்டையில் 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் இருந்தமை தெரிய வந்தது.

குறித்த வெளிநாட்டு சிகரெட்டுகளை, கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்ததையடுத்து, சிகரெட் மற்றும் வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த பொலிஸார், அவற்றை சட்ட நடவடிக்கைகளுக்காக சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *