அரசாங்க வைத்திய அதிகாரிகள் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் இன்று (09) வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, குறிப்பாக முதுகலைப் பட்டப் பயிற்சி வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்கள் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அடையாளப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைத்தியர்களின் இடமாற்ற செயல்முறையை அரசியல்மயமாக்கும் முயற்சிகளுக்கு எதிராக சங்கம் முன்னதாகவே தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதியின் தலையீட்டுடன், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் சுகாதார அமைச்சரும் இடையே இன்று கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கலந்துரையாடல் நிறைவடையும் வரை, சம்பந்தப்பட்ட முதுகலைப் பட்டப் பயிற்சி வைத்தியர்களின் இடமாற்றப் பட்டியலை இடைநிறுத்தி வைப்பது என உடன்பாடு எட்டப்பட்டிருந்ததாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், அதனை மீறி சுகாதார அமைச்சு குறித்த இடமாற்றப் பட்டியலை வெளியிட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *