கொத்தியாபுலையில் தாயொருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, நகை கொள்ளையிடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கக் கோரியும் மட்டக்களப்பில் இன்று (புதன்கிழமை) அமைதி வழிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மண்முனை வடக்கு இளைஞர் சம்மேளனம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கோரியும் சமூகப் பாதுகாப்பு குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, கடத்திச் சென்று, நகைக்காகக் கொலை செய்து கிணற்றில் வீசிய இத்தகைய கொடூரமான கும்பலுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது என இளைஞர்கள் இதன்போது உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர். இத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாதிருக்கக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதும் போராட்டக்காரர்கள் தெரித்தனார்.
24 மணி நேரத்திற்குள் துரிதமாகச் செயற்பட்டு குற்றவாளிகளை அடையாளங்கண்டு கைது செய்த பொலிஸாரின் செயலை இளைஞர்கள் பாராட்டு தெரிவித்தார்.
இதேவேளை போராட்டத்தின் ஒரு கட்டமாக, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குச் சென்ற இளைஞர்கள் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தர மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன
ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு மாலை அணிவித்து தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் குழுவினரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பொலிஸார் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகச் சம்மேளனத் தலைவர் இதன்போது குறிப்பிட்டார். கறுப்பு ஆடை அணிந்து அமைதியான முறையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.




